“புதுவையிலே வெடித்தெழுந்த ஊழித்தீயின் புனைபெயர்தான்
பாரதிதாசன்” என்று புலவர் புலமைப்பித்தன் அவர்கள் குறிப்பிடுவார்கள். தமிழ்க்கவிதைப்
பரப்பில் தமக்கெனப் பரம்பரை கண்ட பெருமை பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கே உண்டு. பாரதியாரைத்
தம் ஆசிரியராகக் கொண்ட பாரதிதாசன் தொடக்கத்தில் இறைநெறிப் பாடல்களைத்தான் எழுதிக்கொண்டிருந்தார்.
திராவிட இயக்கத் தொடர்பு அமைந்த பிறகு பகுத்தறிவு, பெண்கல்வி, தமிழ் உணர்வு, சமூகச்
சீர்திருத்தம் குறித்த பாடல்களை எழுதினார்.
பாவேந்தரின் கவிதை வீச்சு கடந்த அரை நூற்றாண்டைக்
கடந்து இன்றும் தமிழ்க்கவிதை உலகில் மையம் கொண்டுள்ளளது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களையும்,
அவர்தம் படைப்புகளையும், பாவேந்தர் குறித்து வெளிவந்த நூல்களையும், பாவேந்தரையும் அவர்
படைப்புகளையும் ஆய்வுசெய்த அறிஞர் பெருமக்களையும் இந்த வலைப்பூவில் தொடர்ந்து அறிமுகம்
செய்து ஆவணப்படுத்துவேன்.
பாவேந்தரின் நினைவுநாள் நாளைப் (21.04.2013)
புதுச்சேரியில் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
